செப்டம்பர் கார் விற்பனை 6% உயர்வு 2ம் இடம் பிடித்தது டாடா மோட்டார்ஸ்
செப்டம்பர் கார் விற்பனை 6% உயர்வு 2ம் இடம் பிடித்தது டாடா மோட்டார்ஸ்
ADDED : அக் 02, 2025 12:22 AM

சென்னை : கடந்த மாத பயணியர் கார் விற்பனை, 5.99 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், 3.23 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பரில் 3.42 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி., குறைப்பு அமலுக்கு வந்த, கடந்த மாதம் 22ம் தேதிக்கு பிறகு கார் விற்பனை சட்டென அதிகரித்து இருந்தாலும், அதுவரை வாடிக்கையாளர்கள் கார் முன்பதிவு செய்ய
தாமதித்து வந்தனர்.
இதன் காரணமாக, மாருதி கார்களின் விற்பனை, 8.37 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி, 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததால், மொத்த விற்பனை, 2.67 சதவீதம் அதிகரித்து, 1.89 லட்சம் மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.தொடர் பின்னடைவை சந்தித்து வந்த, டாடா நிறுவனத்தின் கார் விற்பனை, எதிர்பாராத வகையில் 45.52 சதவீதம் உயர்ந்து, இதுவரை காணாத அளவில் 59,667 கார்களை விற்பனை செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மின்சார கார்களின் விற்பனை 96 சதவீதமும், சி.என்.ஜி., கார்களின் விற்பனை, இதுவரை காணாத அளவில் 105 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது, இதற்கு முக்கிய
காரணங்கள். மஹிந்திரா நிறுவனம், 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், புதிய ஜி.எஸ்.டி., அமலான முதல் ஒன்பது நாட்களில், அந்நிறுவன கார்கள் விற்பனை 60 சதவீதம்
உயர்ந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், ஏற்றுமதி 44 சதவீதம் உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனை, 101 சதவீதம் உயர்ந்து, 6,728 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு, இந்நிறுவனத்தின் குறைந்த விலை காரான கைலாக் முக்கிய காரணம். எம்.ஜி.,
நிறுவனத்தின் விற்பனை, 34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பண்டிகை காலம், ஜி.எஸ்.டி., குறைப்பால் விலை சரிவு உள்ளிட்டவை அக்டோபர் மாத கார் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.