UPDATED : செப் 04, 2025 09:45 AM
ADDED : செப் 04, 2025 02:24 AM

புதுடில்லி: வலுவான தேவை மற்றும் புதிய ஆர்டர்கள் அதிகரித்ததன் காரணமாக, நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15 ஆண்டுகளில் இல்லாத உச்சம் தொட்டு உள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது.
சேவைகள் துறை வளர்ச்சியை குறித்து எச்.எஸ்.பி.சி., வங்கி அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை மாதத் தில் 60.50 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை வளர்ச்சி, ஆகஸ்டில் 62.90 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இதுவே கடந்த 15 ஆண்டு களில் அதிகபட்ச வளர்ச்சியாகும். இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும். புதிய ஆர்டர்கள், குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்ததே வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். சர்வதேச அளவில் விற்பனை அதிகரித்ததால், நிறுவனங்களின் பணியாளர் தேவையும் அதிகரித்தது.
இதன் காரணமாக, கடந்த மாதம் பணியமர்த்தல்கள் அதிகரித்தன. உள்ளீட்டு பொருட்களின் செலவும், உற்பத்தி செலவும் உயர்ந்தன. வலுவான தேவை நிலவியதால், நிறுவனங்கள் விற்பனை விலையை கணிசமாக உயர்த்தின.
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சியை குறிக்கும், கூட்டு பி.எம்.ஐ., குறியீடு கடந்த மாதம் 63.20 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச கூட்டு பி.எம்.ஐ., வளர்ச்சியாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.