'டாடா சன்ஸ்' பங்கு சந்தையில் பட்டியலிடப்பட வேண்டுமா?
'டாடா சன்ஸ்' பங்கு சந்தையில் பட்டியலிடப்பட வேண்டுமா?
UPDATED : அக் 07, 2026 07:21 AM
ADDED : அக் 06, 2026 10:54 PM

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, 'டாடா சன்ஸ்' நிறுவனம், உயர்நிலை வங்கிசாரா நிதி நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் அது பங்குச் சந்தையில் கட்டாயம் பட்டியலிடப்பட வேண்டும். இதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி டாடா சன்ஸ் அளித்த கோரிக்கையை, ரிசர்வ் வங்கி நிராகரித்துவிட்டது.
இந்தச் சூழலில், பல பெரிய நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு மாபெரும் 'முதன்மை நிறுவனம் 'பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது, பட்டியலிடப்படாமல் இருப்பது என்பதில் எது சிறந்தது என்பதைப் பற்றிய தர்க்கம் எழுகிறது.
நன்மைகள்
டாடா சன்ஸ் பட்டியலிடப்பட்டால், சந்தையின் நேரடிக் கண்காணிப்பும், வெளிப்படைத்தன்மையும், தினசரி பங்கு விலை நிலவரமும், நிர்வாகத்தில் ஒரு கட்டுப்பாடும் கிடைக்கும். முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் ஏற்படும்.
அதேநேரம், பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்டால், ஒவ்வொரு காலாண்டிலும் லாபத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால், பட்டியலிடப் படாத ஒரு வலிமையான தாய் நிறுவனம், குறுகிய கால லாபத்தை விட, நீண்டகால வளர்ச்சியை மனதில் கொண்டு முடிவுகளை எடுக்க முடியும். இது, பட்டியலிடப்பட்ட நிறுவனம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவதில்லை என்பதல்ல; அது பலதரப்பட்ட முதலீட்டாளர்களின் சங்கமம் என்பதால், வேறுபட்ட எதிர்பார்ப்புகள் இருப்பதால், அமைப்பு ரீதியாக சில தடங்கல்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
இதற்கு டாடா குழுமத்திலேயே மூன்று உதாரணங்கள் உள்ளன:
டாடா பைனான்ஸ்
1990களின் இறுதியில், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. பல சிறு முதலீட்டாளர்கள் கடும் நஷ்டங்களைச் சந்தித்தனர். அப்போது டாடா பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நான்கு லட்சம் சிறு முதலீட்டாளர்களின் கிட்டத்தட்ட 875 கோடி ரூபாய் முதலீடு கேள்விக்குறியானது. அப்போது, டாடா குழுமம் உடனடியாக 615 கோடி ரூபாயை உள்ளே கொண்டு வந்து,
சிறுமுதலீட்டாளர்களின் வைப்புநிதியை முழுவதுமாக திருப்பித் தந்து, அவர்களுக்குத் துன்பம் நேராமல் காத்தது. நீண்ட காலமாகச் சம்பாதித்த 'நற்பெயரைக்'காப்பாற்றிக்கொள்ள, லாப--நஷ்டம் பார்க்காமல் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
டாடா டெலிசர்வீசஸ்
தொலைத்தொடர்புத் துறையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டபோது, டாடா நிறுவனம் அந்தத் தொழிலை விட்டுவிட்டு ஓடவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 45,000 கோடி ரூபாயை டாடா சன்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்துக்குள் கொண்டு வந்து, வங்கிக் கடன்கள் அனைத்தையும் அடைத்தது. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் வங்கித் துறைக்கு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
ஏர் இந்தியா
பல ஆண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கிய ஏர் இந்தியாவை, டாடா குழுமம் வாங்கியது. இதனை மீட்டெடுத்து மீண்டும் இயங்க வைக்க பல ஆண்டுகள் ஆகும். அதற்கு மிகப்பெரியளவிலான நீண்டநாள் முதலீடு தேவை.
இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிய காலகட்டத்தில், ஒரு நா ட்டின் முக்கிய நிறுவனத்தின் தேவையை உணர்ந்து அதைச் சீர்செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் டாடா நிறுவனம் அதை ஏற்று செம்மைப் படுத்த முயலும் அதேநேரத்தில், அந்த நிறுவனத்தை பட்டியலிடப்பட வைத்தால் அதே உணர்வுடன் தொடர்ந்து பொறுமையாக மேலும் முதலீடு செய்து, பலகாலம் காத்திருக்கும் செயல்பாடு தொடருமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
முக்கிய கேள்வி
ஒரு நிறுவனம் திவாலானால், அந்த நஷ்டம் இறுதியி ல் வங்கிகளையே பாதிக்கும். அதாவது மக்களின் பணம் தான் பாதிப்புக்கு உள்ளாகும். ஆனால், டாடா சன்ஸ் போன்ற ஒரு வலிமையான நிறுவனம், தங்கள் கீழ் இ யங்கும் நிறுவனங்களின் நஷ்டத்தைத் தாங்களே முழுமையாக தாங்கிக்கொண்டு, வங்கிகளைக் காப்பாற்றுகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டால், இந்த சுதந்திரமும் நஷ்டத்தைத் தாங்கும் திறனும் தொடருமா என்பது தர்க்கத்துக்குரியது.
பங்குதாரர்களின் உரிமை
டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீதப் பங்குகளை 'ஷபூர்ஜி பல்லோன்ஜி' குழுமம் வைத்துள்ளது. நிறுவனம் பட்டியலிடப் படாததால், அவர்கள் தங் கள் பங்குகளை எளிதில் விற்பனை செய்யவோ, அதன் உண்மையான சந்தை மதிப்பைப் பெறவோ முடிவதில்லை என்பது ஒரு குறை. இது பட்டியலிடுவதால் ஏற்படும் மிகச் சிறந்த தீர்வு.
டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிடுவதற்கு மாறாக, வெளிப்படையான ஒரு மதிப்பீட்டுக் குழுவை அமைத்து, சிறுபான்மை பங்குதாரர்கள் வெளியேற விரும்பினால், அதற்கா ன தெளிவான காலக்கெடு மற்றும் விலையை நிர்ணயிக்கும் முறையை உருவாக்கலாம். சிறந்த வழியில்லை என்றாலும், இது பிரச்னைக்கு முடிவு தரும்.
இங்கே கவனிக்க வேண்டியது டாடா டிரஸ்டின் அடிப்படை நோக்கம். டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீதப் பங்குகள் 'டாடா ட்ரஸ்ட்'வசம் தான் இருக்கின்றன.
இவர்களின் நோக்கம் வெறும் வணிக லாபம் மட்டுமல்ல; இவர்கள் தேசக் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
எது முக்கியம்?
பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்பது உண்மைதான். ஆனால், 'பட்டியலிடப்படுவது மட்டுமே ஒரே தீர்வு'என்று விதிகளைச் சுருக்குவது சிறந்த அணுகுமுறையா என்பதை யோசிக்க வேண்டும்.
போதுமான மூலதனம், சிறந்த நிர் வாகம், வெளிப்படைத்தன்மை, நஷ்டங்களைத் தாங்கி வங்கிகளைக் காப்பாற்றும் திறன் ஆகியவற்றைக் கொண்ட நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி தனது வி திகளில், அந்தந்த நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப சில சலுகைகளை அளிப்பதை பற்றி யோசிக்கலாம். மேலும் சில விதிமுறைகளை அவற்றுக்கு ஏற்றார்போல் வகுத்து, அவற்றை நெறிப்படுத்த முயற்சிக்கலாம்.

வெறும் விதிமுறை களுக்காகப் பட்டியலிடுவது மட்டுமே தீர்வு என்று ஒரே விதியில் நிற்காமல், நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் நீண்டகால மதிப்பு, செயல்பாடு முதலியவற்றை கருத்தில் கொண்டு மாற்று முறைகளையும், ஏற்பாடுகளையும் பரிசீலிக்கும் அணுகுமுறை, நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும்.-----------------------------
-வி.எஸ். ராதாகிருஷ்ணன்,
முன்னாள் துணை நிர்வாக இயக்குநர், பாரத ஸ்டேட் வங்கி
தொடர்புக்கு: 9619932211
