தமிழகத்தில் விண்வெளி தொழில் பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
தமிழகத்தில் விண்வெளி தொழில் பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : மார் 08, 2024 01:47 AM

சென்னை:தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்க, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் இடையே, நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் பெருகி வரும் விண்வெளித்துறை சார்ந்த நடவடிக்கைகளை கருத்தில் வைத்து, 2,000 ஏக்கரில் விண்வெளி தொழில் துறை மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்க, 'டிட்கோ' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்பூங்காவில் அமைய உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவாக, ஒரு திறன்மிகு மையத்தை உருவாக்கவும், டிட்கோ திட்டமிட்டுள்ளது.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், இந்தியாவில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின், அனைத்து விண்வெளித் துறை நடவடிக்கைகளுக்கான, ஒற்றைச் சாளர முகமை நிறுவனமாகும்.
விண்வெளித் துறைக்கு ஆதரவாக முன்மொழியப்பட்ட, திறன்மிகு மையத்தை அமைக்க, 'இன் ஸ்பேஷ்' எனப்படும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் பெரிதும் பயன்படும்.
இதற்காக, 'டிட்கோ' எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், இன் ஸ்பேஷ் நிறுவனம் இடையே, நேற்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, 'இன் ஸ்பேஷ்' தலைவர் பவன்குமார் கோயங்கா ஆகியோர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்தி பிரிவை துவங்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தப்படி விண்வெளித்துறை முன்னேற்றத்திற்காக, டிட்கோ அமைக்க உள்ள திறன்மிகு மையத்திற்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, பூங்காவில் அவற்றின் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதில், 'இன் ஸ்பேஷ்' நிறுவனம் முக்கிய பங்காற்றும்.
விண்வெளி தொழில் துறையில், தமிழகம் மிகச்சிறந்த முனையமாக உருவெடுக்க, இந்த ஒப்பந்தம் பெரும்பங்கு வகிக்கும்.

