'டாடா' செமிகண்டக்டர் திட்டம் சிங்கப்பூர் அரசின் நம்பிக்கை
'டாடா' செமிகண்டக்டர் திட்டம் சிங்கப்பூர் அரசின் நம்பிக்கை
ADDED : நவ 08, 2024 11:31 PM

மும்பை:டாடா குழுமத்தின் செமிகண்டக்டர் திட்டத்தில், சிங்கப்பூர் முக்கிய அங்கமாக இருக்கும் என, சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் சண்முகம் நம்பிக்கை தெரிவித்துஉள்ளார்.
ஒருநாள் அரசுமுறை பயணமாக நேற்று மும்பை வந்த அவர், 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனை சந்தித்தார். அப்போது, செமிகண்டக்டர் குறித்து விரிவாக விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த தாவது:
டாடா குழுமம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, அவர்களது செமிகண்டக்டர் திட்டத்தில், சிங்கப்பூர் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சிங்கப்பூர், செமிகண்டக்டர் துறையில் நம்பத்தகுந்த மற்றும் முக்கியமான நாடாக திகழ்ந்து வருகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள், உலகளவில் செமிகண்டக்டர் உபகரண உற்பத்தியில், 20 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும், 25 செமிகண்டக்டர் பவுண்டரிகளைக் சிங்கப்பூர் கொண்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
செமிகண்டக்டர் துறையில் தடம் பதிக்க உள்ள டாடா குழுமம், அதற்கான தயாரிப்பு ஆலையை அமைக்க குஜராத்தில் 91,000 கோடி ரூபாயும்; அசாமில் 27,000 கோடி ரூபாயும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.