துாத்துக்குடியில் கடல் நீரை நன்னீராக்கும் ஆலை ஆணை வழங்கியது 'சிப்காட்' நிறுவனம்
துாத்துக்குடியில் கடல் நீரை நன்னீராக்கும் ஆலை ஆணை வழங்கியது 'சிப்காட்' நிறுவனம்
UPDATED : ஆக 28, 2025 10:38 AM
ADDED : ஆக 28, 2025 01:20 AM

சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய, அம்மாவட்டத்தின் முள்ளக்காட்டில் பொது - தனியார் கூட்டு திட்டம் வாயிலாக, தினமும் 6 கோடி லிட்டர் கடல் நீரை, நன்னீராக்கும் ஆலை அமைகிறது.
இதற்காக, ஜிண்டால், ஐ.டி.இ., டெக்னாலஜிஸ், விஷ்ணுசூர்யா ஆகிய நிறுவனங்களுக்கு, 'சிப்காட்' நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது.
துாத்துக்குடி துறைமுகம் அருகில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் 100க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. இவற்றுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்காக, துாத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில், தினமும், 6 கோடி லிட்டர் கடல் நீரை, நன்னீராக மாற்றும் திறன் உடைய ஆலை அமைக்க சிப்காட் முடிவு செய்துள்ளது.
இதை, பி.பி.பி., மாடல் எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க, 2024 இறுதியில், 'டெண்டர்' கோரப்பட்டது. இதில், பங்கேற்ற நிறுவனங்களின் விபரங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.
இதில் தேர்வான ஜிண்டால், ஐ.டி.இ., டெக்னாலஜீஸ், விஷ்ணுசூர்யா ஆகிய கூட்டு நிறுவனங்களுக்கு பணி ஆணையை தற்போது, சிப்காட் வழங்கியுள்ளது. இதற்கான திட்ட செலவு, 2,200 கோடி ரூபாய். இந்நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் பணிகளை துவக்கி, 30 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
* திட்டத்தின் மொத்த செலவில் ஒப்பந்த நிறுவனங்களின் பங்கு 60%, சிப்காட் பங்கு, 40%
* ஒப்பந்த நிறுவனங்கள் ஆலையை அமைத்து, 15 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்
* தொழிற்சாலைகளுக்கு, 1,000 லிட்டர் தண்ணீர் , 150 ரூபாய் என்ற உத்தேச விலையில் விற்க திட்டம்