UPDATED : அக் 14, 2026 05:48 PM
ADDED : அக் 14, 2026 05:44 PM
சென்னை: தமிழகத்தின் முக்கிய தொழில் மையங்களில் புதிய நிறுவனங்கள் தொடங்க தேவையான சிப்காட் தொழிற்பேட்டை நிலங்களின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதாக, ஜோன்ஸ் லாங் லாசால் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடாய் அமைப்புக்காக தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு 2036’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் 24 மாவட்டங்களில், எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட மொத்தம் 50 தொழிற்பூங்காக்கள் சிப்காட் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இவற்றின் மொத்த பரப்பளவு 48,900 ஏக்கர். ஏற்கெனவே அதிக தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகளில் அரசுக்கு சொந்தமான தொழிற்பேட்டை நிலங்கள் குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தனியார் துறையால் உருவாக்கப்படும் தொழில்துறை வசதிகள் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் சிப்காட் கைவசம் எஞ்சியுள்ள தொழிற்பேட்டை நிலங்கள் தலா 9 ஏக்கருக்கும் குறைவாக உள்ளன. ஓசூரில் 12.10ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது. அதேநேரம், திருச்சியில் 312.10 ஏக்கரும், தூத்துக்குடியில் 127.40 ஏக்கரும் நிலம் கையிருப்பில் உள்ளது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு திட்டங்கள் வந்துள்ள நிலையில், முக்கிய தொழில் மையங்களில் நில கையிருப்பு குறைந்து வருவது, புதிய முதலீட்டு திட்டங்களுக்கு சவாலாக மாறக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
