ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஈர்த்த 'சிப்காட்' பூங்காக்கள்
ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஈர்த்த 'சிப்காட்' பூங்காக்கள்
ADDED : நவ 08, 2025 03:32 AM

சென்னை: தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு, 2 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
தமிழகத்தில் தொழில் துவங்க வரும் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது.
கடந்த, 1971ல் துவக்கப்பட்ட அந்நிறுவனத்துக்கு தற்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில், 49,000 ஏக்கரில், எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட, 50 தொழில் பூங்காக்கள் உள்ளன.
அவற்றில் கார், பைக், வர்த்தக வாகனம், மின் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி, மருத்துவ சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஆலைகள் அமைந்துள்ளன.
சிப்காட் தொழில் பூங்காக்களில் இதுவரை, 3,410 தொழில் நிறுவனங்கள் வாயிலாக, 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக நேரடியாக மற்றும் மறைமுகமாக, 9 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சிப்காட் ஈர்த்துள்ள மொத்த முதலீட்டில் 30 - 40 சதவீதம், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொழில் பூங்காக்களில் உள்ளன.

