புதிய தொழில் பூங்காக்களுக்கு மின் இணைப்பு கோரும் சிப்காட்
புதிய தொழில் பூங்காக்களுக்கு மின் இணைப்பு கோரும் சிப்காட்
ADDED : ஏப் 15, 2025 10:58 PM

சென்னை:தமிழகம் முழுதும் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 14 தொழில் பூங்காக்களில், துணைமின் நிலையங்களை விரைவாக அமைத்து, மின் வினியோகம் செய்யுமாறு, மின் வாரியத்தை சிப்காட் வலியுறுத்தியுள்ளது.
தற்போது 20 மாவட்டங்களில், ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கி, 40 தொழில் பூங்காக்களை சிப்காட் நிர்வகிக்கிறது. ஒவ்வொரு பூங்காவிலும் உள்ள தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறிய, மாதந்தோறும் குறைதீர் கூட்டத்தை சிப்காட் நடத்துகிறது.
அதில் மின்சாரம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ராதாகிருஷ்ணன், 'சிப்காட்' மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அதில், புதிய தொழில் பூங்காக்களுக்கு மின் வினியோகம் வழங்கும் பணியை விரைந்து மேற்கொள்வதுடன், தொழில் நிறுவனங்களின் குறைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க, ஒவ்வொரு தொழில் பூங்காவிலும் தலா, 110/ 33 கிலோ வோல்ட் திறனில், துணைமின் நிலையம் அமைக்க, நான்கு முதல், 12 ஏக்கர் நிலத்தை மின் வாரியத்திற்கு சிப்காட் இலவசமாக வழங்கியுள்ளது.

