சூளகிரியில் தொழில் பூங்கா சூழல் அனுமதி கோரும் சிப்காட்
சூளகிரியில் தொழில் பூங்கா சூழல் அனுமதி கோரும் சிப்காட்
ADDED : ஜூலை 18, 2025 10:48 PM

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், 1,882 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
சென்னை, கோவைக்கு அடுத்து, முக்கிய தொழில் மையமாக கிருஷ்ணகிரி உருவெடுத்து வருகிறது. அம்மாவட்டத்தில் உள்ள ஓசூரில், 2,093 ஏக்கரிலும், சூளகிரியில், 1,000 ஏக்கரிலும், பர்கூரில், 1,379 ஏக்கரிலும், குருபரப்பள்ளியில், 184 ஏக்கரிலும் தொழில் பூங்காக்கள் உள்ளன.
இவற்றில் மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் ஆலைகள் செயல்படுகின்றன. பல ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
சூளகிரியில், 1,882 ஏக்கரில் இரண்டாவது தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கவும்; 14,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொழில் பூங்காவில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு சிப்காட் விண்ணப்பம் செய்துள்ளது.