கப்பல் கட்டும் தளம் அமைக்க துாத்துக்குடியில் இடம் தேர்வு
கப்பல் கட்டும் தளம் அமைக்க துாத்துக்குடியில் இடம் தேர்வு
ADDED : மே 13, 2025 11:36 PM

புதுடில்லி:தமிழகத்தில் மெகா கப்பல் கட்டும் தளம் மற்றும் பழுது பார்க்கும் மையங்களை நிறுவுவதற்கான இடங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா தற்போது உலகளாவிய கப்பல் கட்டும் சந்தையில், ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
ஆனால், வரும் 2030ம் ஆண்டுக்குள், உலகளாவிய முதல் 10 தரவரிசையில் இடம் பிடிக்கவும், 2047ம் ஆண்டுக்குள் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைவதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் மெகா மையங்கள் வாயிலாக, இந்தியா தன் கப்பல் கட்டும் தொழிலை மேம்படுத்த உள்ளது.
இதையடுத்து, இம்மாநிலங்களில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்க்கும் மையங்களை அமைப்பதற்கான இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழகத்தின் துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் பழுது நீக்கும் மையம் ஒன்று அமைய உள்ளதாக, மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், தென்கொரியாவின் 'எச்.டி., ஹூண்டாய்' நிறுவனமும், கொச்சின் ஷிப்யார்டும் இணைந்து கூட்டாக பெரிய கப்பல்களை தயாரிப்பதற்கான மேம்பட்ட பேச்சில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2025 - 26 பட்ஜெட்
18,090 கோடி ரூபாய், திருத்தப்பட்ட கப்பல் கட்டும் நிதி உதவிக்கொள்கை அறிவிப்பு
25,000 கோடி ரூபாய் கடல்சார் மேம்பாட்டு நிதியை நிறுவுதல் குறித்தும் அறிவிப்பு.
கப்பல் கட்டும் தொழில் மதிப்பு
2022: ரூ.765 கோடி
2024: ரூ.9,520 கோடி
2033: ரூ. 68,000 கோடி (கணிப்பு)
உலக சந்தையின் இந்தியாவின் பங்கு: 1%
உலகளவில் இந்தியாவின் இடம்: 20
கப்பல் கட்டுவதில் ஆதிக்கம்
சீனா
தென் கொரியா
ஜப்பான்