சிவகங்கை 'சிப்காட்' பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது
சிவகங்கை 'சிப்காட்' பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது
ADDED : ஜன 28, 2025 10:32 PM

சென்னை:தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், பெரிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க வசதியாக சாலை, குடிநீர் இணைப்பு, மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பூங்காக்களை அமைத்து வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்குடி, கிளாத்தாரி, அரசனுார் ஆகிய கிராமங்களில், 775 ஏக்கரில் இலுப்பைக்குடி தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்த நிலையில், அதை மேம்படுத்தும் பணியும், கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இங்குள்ள மனைகள், தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம், 'சிப்காட்' அனுமதி கோரியிருந்தது.
இம்மனுவை பரிசீலித்த ஆணையம், இலுப்பைக்குடி தொழிற்பூங்காவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இங்கு, நிலத்தை மேம்படுத்தி, அனைத்து வகை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.