ADDED : ஜன 13, 2024 12:06 AM

சென்னை:தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர, 'சிப்காட்' நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கிறது. இதை, பெங்களூருவில் உள்ள என்.டி.டி.எப்., மையத்துடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது.
தமிழக அரசின், சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்துக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், 3,200 ஏக்கரில் தொழில் பூங்கா உள்ளது. அங்கு, வாகன தயாரிப்பு, கைக்கடிகாரம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் உள்ளன.
சூளகிரி தொழில் பூங்காவில் சிப்காட், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள என்.டி.டி.எப்., எனப்படும், நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, திறன் மேம்பாட்டு மையம் அமைக்கிறது. மொத்த திட்ட செலவு, 80 கோடி ரூபாய்.
தற்போது, 35 கோடி ரூபாய் செலவில், 1.12 லட்சம் சதுர அடியில் திறன் மேம்பாட்டு மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது, தரை தளம் மற்றும் இரு தளங்களை உடையதாக இருக்கும்.
மீதி செலவில், தொழில்நுட்ப பயிற்சி அளிக்க தேவையான இயந்திரம், சாதனங்கள் நிறுவப்படும். தொழிற்சாலைகளுக்கு என்ன மாதிரியான திறன் உடைய பணியாளர்கள் தேவை என்பதை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப, ஆறு மாதம், மூன்று ஆண்டுகள் என தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
மொத்த திட்ட செலவு: ரூ.80 கோடி
கட்டுமான செலவு: ரூ.35 கோடி
இயந்திரம், சாதனங்கள்: ரூ.45 கோடி