ADDED : நவ 12, 2024 09:03 AM

புதுடில்லி: வாகன உடைப்புக்கான கொள்கை மக்களிடையே மந்தமான வரவேற்பையே பெற்றுள்ளதாகவும், இதற்கு இடப்பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ளதாகவும் வாகனத் துறையைச் சேர்ந்த முகவர் கள் தெரிவித்துள்ளனர்.
பழைய வர்த்தக வாகனங்கள் வாயிலாக ஏற்படும் மாசுபாட்டை குறைக்க, வாகன உடைப்புக்கான கொள்கையை அரசு அறிவித்தது. இதன் வாயிலாக, 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை நுகர்வோர் தாமாக முன்வந்து உடைக்க அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலாக, வாங்கும் புதிய வாகனங்களின் விலையில், 4 முதல் 6 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என, தெரிவிக்கப் பட்டது.
இதற்கு இந்திய வாகன உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், தொழில்துறையினரின் கருத்துப்படி, ஸ்கிராப்பிங் எனப்படும் வாகன உடைப்பு கொள்கைக்கு மக்களிடையே மந்தமான வரவேற்பே கிடைத்துள்ளது என, தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது:
ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் டில்லி மாநில அரசுகள், பழைய வாகன உடைப்புக்கு மத்திய அரசின் கொள்கையில் இருந்து கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளன.
இதனால், அம்மாநிலங்களில் வாகன உடைப்புக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இக்கொள்கை நாடு முழுதும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பிற மாநிலங்களும் இக்கொள்கையை விரைவில் அமல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
வாகன உடைப்புக் கொள்கைக்கான வரவேற்பு குறைந்ததற்கு, இடப் பற்றாக்குறை முதன்மையான காரணமாக உள்ளது.
நகரங்களில் வாகனங்களை உடைக்க இட வசதி மற்றும் பொருத்தமான இடங்கள் குறைவாக உள்ளதால், வாகன உடைப்புக்கான முயற்சிகள் நாடு முழுதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும், நுகர்வோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை. நுகர்வோர் பழைய வாகனத்தை கைவிடுவதற்கு முன்வர, மாநில அரசுகள் கூடுதல் சலுகைகளை அளித்து ஊக்குவிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளனர்.

