சிறுதொழிலுக்கு ஊக்குவிப்பு கொள்கை தமிழக நிறுவனங்களிடம் கருத்து கேட்பு
சிறுதொழிலுக்கு ஊக்குவிப்பு கொள்கை தமிழக நிறுவனங்களிடம் கருத்து கேட்பு
ADDED : அக் 27, 2025 10:50 PM

சென்னை,
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி செலவை குறைக்கவும், சர்வதேச போட்டியை சமாளிக்கவும் ஊக்குவிப்பு கொள்கையை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுதும் செயல்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வாகன, கனரக இயந்திரங்களுக்கான உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
அவை, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரியால், நம்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
எனவே, நாட்டில் தோல் பொருட்கள், ஜவுளி, இன்ஜினியரிங் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி செலவை குறைக்கவும், சர்வதேச போட்டியை சமாளிக்கவும் ஊக்குவிப்பு கொள்கையை மத்திய அரசு வெளியிட உள்ளது.
இதற்காக, சென்னை உட்பட மூன்று இடங்களில் தொழில்முனைவோரிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
மதுரையில் வரும், 30ம் தேதி வேளாண் பல்கலை, சென்னையில் நவ., 4ம் தேதி கிண்டி, திருப்பூரில் நவ., 6ம் தேதி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்திலும் தொழில்முனைவோரிடம் கருத்து கேட்பு கூட்டங்களை மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் நடத்த உள்ளது.
இதில், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர், தொழில்முனைவோர் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம்.

