சிறுதொழிலுக்கு விரைவாக பணம் பேம் டி.என்., திட்டத்தால் பலன்
சிறுதொழிலுக்கு விரைவாக பணம் பேம் டி.என்., திட்டத்தால் பலன்
UPDATED : டிச 20, 2025 01:17 AM
ADDED : டிச 20, 2025 01:16 AM

சென்னை:பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்ற, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக பணம் பெற்று தரும் வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தின் கீழ் இதுவரை, 1,622 நிறுவனங்கள், 5,025 கோடி ரூபாய் மதிப்புக்கு பயன்பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், உதிரிபாகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
![]() |
இந்நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த காலத்தில் பணம் தருவதில்லை. இதனால், சிறு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்குகின்றன.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் திட்டத்தை தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் பேம் டி.என்., நிறுவனம், 2022 இறுதியில் துவக்கியது.
இந்த தளத்தில் பொதுத் துறை நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறு வனங்கள், வங்கிகள் இணைந்துள்ளன.
நிலுவை தொகை வர வேண்டிய நிறுவனம், தளத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதை பொருட்களை வாங்கிய அல்லது சேவைகளை பெற்ற பொதுத்துறை நிறுவனங்கள் உறுதி செய்யும். அந்நிறுவனத்தின் சார்பில் பணம் வழங்க வங்கிகள் முன்வரும். இதற்காக, தளத்தில் உள்ள ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடியாக கேட்கும்.
விருப்பமான தள்ளுபடியை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தேர்வு செய்ததும், தள்ளுபடி தொகை போக, மீதி தொகை நிறுவனத்தின் வங்கி கணக்கில், சம்பந்தப்பட்ட வங்கி செலுத்தும். இதனால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விரைவாக பணம் கிடைக்கிறது.


