நிலுவையை வழங்காத பெருநிறுவனங்கள் சொத்து பறிமுதல் செய்ய அதிகாரம் தேவை சிறுதொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
நிலுவையை வழங்காத பெருநிறுவனங்கள் சொத்து பறிமுதல் செய்ய அதிகாரம் தேவை சிறுதொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 10, 2025 12:37 AM

சென்னை:சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவும் வசதியாக்கல் குழுவுக்கு, பெரிய நிறுவனங்களின் நிலுவைக்கு பதிலாக, சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தொழில்முனைவோரிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து, பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுகின்றன.
இதற்கான பணத்தை, பல நிறுவனங்கள் குறித்த காலத்தில் தருவதில்லை. இதனால், சிறு நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாவதால், தொழில் முடங்கும் நிலையும் உருவாகிறது.
சிறு தொழில்களுக்கு விரைவாக பணத்தை பெற்றுத்தர சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலுார், துாத்துக்குடியில் வசதியாக்கல் குழு செயல்படுகிறது.
இக்குழுவின் தலைவராக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தொழில் வணிக ஆணையர் உள்ளார்.
பொருட்களை வாங்கி, 45 நாட்களுக்கு மேல் பணம் தராத நிறுவனங்கள் மீது, இக்குழுவில் புகார் அளிக்கலாம்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு குழு, 'நோட்டீஸ்' அனுப்பி, விசாரணை நடத்தும். தாமதமாகும் பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து வசூலித்து தரப்படும். கடந்த, 2024 - 25ல், 72 கோடி ரூபாய்க்கு, 426 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
வசதியாக்கல் குழுவில் இருந்து, நோட்டீஸ் அனுப்பினால் நேரில் வராத மற்றும் உத்தரவுக்கு கட்டுப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், வசதியாக்கல் குழுவுக்கு அரசு அதிகாரம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு, சிறு தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது.