ADDED : ஜன 04, 2026 01:03 AM

புதுடில்லி: அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக, இந்தியாவில் இருந்து சிறிய வெள்ளரிக்காய் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில், 10 சதவீதம் குறையக்கூடும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'கெர்கின்' எனப்படும் இந்த சிறிய வெள்ளரிக்காய், பெரும்பாலும் வினிகர் அல்லது உப்பு நீரில் பதப்படுத்தி ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஒப்பந்த விவசாய முறையில் இது விளைவிக்கப்படுகிறது.
இவற்றின் தேவை உள்நாட்டில் மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் நாட்டின் மொத்த கெர்கின் ஏற்றுமதியில், 25 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பை தொடர்ந்து, இதன் ஏற்றுமதி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கெர்கின் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், இந்த சரிவு என்பது மதிப்பைக் காட்டிலும் அளவின் அடிப்படையிலேயே இருக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால், ஏற்றுமதியாளர்களின் வருவாயில் இதுவரை பெரிய பாதிப்பில்லை.
ஆனால் நிச்சயமாக ஏற்றுமதி அளவு குறையும். இதன் காரணமாக சாகுபடி செய்வது குறைந்துள்ளது' என்றனர்.
தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிறிய வெள்ளரி பயிரிடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

