ADDED : மார் 19, 2024 10:01 AM
புதுடில்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் அளவு, 253 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வர்த்தக அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கான இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, கடந்த 2022 ஏப்ரல் - டிசம்பர் காலத்தில், கிட்டத்தட்ட 8,283 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே மதிப்பீட்டு காலத்தில், 253 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 29,000 கோடி ரூபாயாக உள்ளது.
அமெரிக்காவின் மொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில், இரண்டு சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு, 7.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக, அமெரிக்காவின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியாளராக, இந்தியா முன்னேறி உள்ளது.
அதே சமயம், அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் ஏற்றுமதியாளர்களான சீனா, வியட்நாம், ஹாங்காங் போன்ற நாடுகளின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐபோன்' இந்தியாவில் தயாரிக்கப்படுவது, ஸ்மார்ட்போன்களுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் அறிமுகம் போன்ற காரணங்களால், இந்தியா, ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கான முக்கிய மையமாக மாறி வருகிறது.

