'ரூ.5 கோடி வரை எஸ்.எம்.இ., கடன் சில நிமிடங்களில் பெற முடியும்'
'ரூ.5 கோடி வரை எஸ்.எம்.இ., கடன் சில நிமிடங்களில் பெற முடியும்'
ADDED : அக் 09, 2025 01:39 AM

மும்பை:இந்தியாவின் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்தால், தரவுகளை பயன்படுத்தி கடன் பெறுவதற்கான தகுதியை கண்டறிய முடியும் என்பதால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சில நிமிடங்களில் கடன் பெற முடியும் என எஸ்.பி.ஐ., தலைவர் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்துள்ளார்
மும்பையில் நடைபெற்ற குளோபல் பின்டெக் விழாவில் பங்கேற்ற அவர் தெரிவித்துள்ளதாவது:
சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர், கடன் தேவைப்படும் பட்சத்தில், 5 கோடி ரூபாய் வரை, 25 முதல் 26 நிமிடங்களில் இப்போது ஒப்புதல் பெற முடியும் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.
நாம் உருவாக்கி உள்ள டிஜிட்டல் கட்டமைப்புகளால் இது சாத்தியமாகி உள்ளது.
காப்பீடு போன்ற நிதிச்சேவைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வந்த போதிலும், தொழில் வாயிலாக கடன் வினியோகத்தை மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் தளங்கள் மற்றும் பின் டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு விரைவான, நம்பகமான கடன் முடிவுகளை உறுதி செய்ய முடியும்.
இதற்காக எஸ்.பி.ஐ., தற்போது யு.பி.ஐ., ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி தாக்கல், கணக்கு அறிக்கை உள்ளிட்ட விரிவான தரவுகளை பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.