ADDED : ஜூலை 20, 2025 02:02 AM

புதுடில்லி:மின்னணு வர்த்தக தளமான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஏஸ் வெக்டார்' புதிய பங்கு வெளியீட்டுக்காக செபியிடம் ரகசிய வழியில் விண்ணப்பித்துள்ளது.
இதுதொடர்பாக ஏஸ் வெக்டார் வெளியிட்டு உள்ள அறிக்கையில், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டுவதற்காக செபியிடம் வரைவு விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது.
ஸ்னாப்டீல் மட்டுமல்லாது, யுனிகாமர்ஸ் என்ற மென்பொருள் சேவை நிறுவனத்தையும், ஸ்டெல்லர் பிராண்ட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இதில், யுனிகாமர்ஸ் நிறுவனம் ஏற்கனவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுவிட்டது.
ரகசிய வழியில் விண்ணப்பித்தால், அனுமதி பெற்ற பிறகு பங்கு வெளியீட்டுக்கு வர கூடுதல் கால அவகாசம் கிடைப்பதோடு, பங்கு விலை மற்றும் எண்ணிக்கையில் கடைசி நேரம் வரை மாற்றம் மேற்கொள்ள முடியும் என்பதால், சமீபகாலமாக பல நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றி வருகின்றன.