ADDED : டிச 06, 2025 01:46 AM

அரசு அலுவலகங்களில் சோலார் மின் நிலையம்
தமிழக அரசின் பல்வேறு துறைகள், மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை சரிவர செலுத்துவதில்லை. எனவே, அரசு அலுவலகங்களில் கூரை சோலார் மின் நிலையங்களை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் அமைக்க உள்ளது.
அதன்படி, தற்போது, ஒவ்வொரு அலுவலகத்திலும், 10 கிலோ வாட், 20 கிலோ வாட் என கூரை சோலார் மின் நிலையங்கள் அமைக்க, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது. டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், சோலார் மின் நிலையம் அமைத்து, 25 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். மாதம், எவ்வளவு யூனிட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதோ, அதற்கான கட்டணத்தை கணக்கிட்டு, பசுமை எரிசக்தி கழகம் வழங்கும்.
டிச., 20 வரை 'ஸ்டார்ட்அப்' நிதியுதவி
தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள, 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு, புத்தொழில் ஆதார நிதியின் கீழ் தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் நிதியுதவி செய்கிறது. அதன்படி, பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பெண்களை முதன்மை பங்குதாரராக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாயும், மற்ற துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, 10 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், www.startuptn.in இணையதளத்தில், வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஸ் வங்கியுடன் எல்.ஐ.சி., ஒப்பந்தம்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., தனது பாலிசிகளை விற்பதற்காக, நாட்டின் ஆறாவது பெரிய தனியார் வங்கியான
எஸ் வங்கியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டணி வாயிலாக, எல்.ஐ.சி., பாலிசிகளில், எஸ் வங்கியின் கிளைகளில் அல்லது வங்கியின் டிஜிட்டல் தளங்களில் சேரலாம்.
எல்.ஐ.சி.,யின் டெர்ம் காப்பீடு திட்டங்கள் எண்டோன்மென்ட் திட்டம், ஓய்வூதியம் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களை, எஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 3,660க்கு மேற்பட்ட எல்.ஐ.சி., கிளைகள் மற்றும் 1,295 எஸ் வங்கியின் கிளைகள், 235 வணிக அலுவலகங்களில் இருந்து பெறலாம்.காப்பீடு செய்வதை எளிதாக அணுகுதல், நிதி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் எல்.ஐ.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

