தென் மாநில ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சி 2024 - 25ல் கடும் வீழ்ச்சி
தென் மாநில ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சி 2024 - 25ல் கடும் வீழ்ச்சி
ADDED : நவ 22, 2024 11:23 PM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது.
நுகர்வு குறைந்துள்ளதால், ஒட்டுமொத்தமாகவே நாட்டின் ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - அக்டோபர் காலத்தில் 10.50 சதவீதமாக சரிந்துள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 14.60 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்த வளர்ச்சி சரிவைக் காட்டிலும், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்களின் வளர்ச்சி சதவீதம் மிக குறைவாகவே உள்ளது.
மாறாக மகாராஷ்டிரா, டில்லி, கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இரட்டை இலக்க ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
மாநிலங்களுக்கிடையே ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சி மாறுபடுவதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதாக, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை மட்டுமே அதன் ஜி.எஸ்.டி., வருவாயை நிர்ணயிப்பதில்லை என்றும்; அங்குள்ள மக்களின் வாங்கும் திறன், வருமான அளவு, நுகர்வு முறை ஆகியவையும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில் வாகனம், ஏ.சி., சிமென்ட், மது, புகையிலை போன்ற பொருட்களுக்கே அதிக வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பொருட்களின் விற்பனை குறைந்திருக்கும்பட்சத்தில், வரி வசூல் சரிந்திருக்கும் என கூறப்படுகிறது.
மற்றொரு புறம், தென் மாநிலங்களில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த விஷயங்களுக்கே அதிகம் செலவு செய்யப்படுவதாக கருத்து நிலவுகிறது. இவற்றுக்கு குறைவான ஜி.எஸ்.டி.,யே வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மத்திய பட்ஜெட்டின்போது, நடப்பு நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சி 11.60 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களின் வளர்ச்சியை பார்க்கும்போது, இந்த இலக்கை எட்டுவது கடினம் என கூறப்படுகிறது.
தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த விஷயங்களுக்கு குறைவான ஜி.எஸ்.டி.,
வசூலிக்கப்படுவதும்வீழ்ச்சிக்கு காரணம்

