ADDED : பிப் 04, 2025 11:06 PM

சென்னை:விண்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க, ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய கொள்கையை தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
நம் நாட்டில் விண்வெளி துறையில் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் மட்டும் ஈடுபட்டு வந்தது. கடந்த, 2021ல் இருந்து தனியார் நிறுவனங்களும் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது, பல நிறுவனங்களும் ராக்கெட் உருவாக்கம், செயற்கைக்கோள் வடிவமைப்பு உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
எனவே, தமிழகத்தில் விண்வெளி துறை மற்றும் அந்த துறைக்கு தேவைப்படும் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, சலுகைகள் அடங்கிய வரைவு அறிக்கையை 'டிட்கோ' 2024 ஜூனில் வெளியிட்டது.
இதுதொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி இத்துறையில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முதலீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதமும்; மற்ற மாவட்டங்களில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு 5 - 7 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
இதுதவிர, முத்திரைத்தாள் கட்டணம், மின்சார வரி விலக்கு உள்ளிட்ட பிற சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.
'வரைவு அறிக்கை தொடர்பாக, தொழில் துறையினர் உட்பட 75க்கும் மேற்பட்ட நபர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஊக்குவிப்பு கொள்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.