ADDED : ஜூன் 05, 2025 12:50 AM

சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ள தமிழக அரசின், 'டிக்' நிறுவனம், கடன் வழங்குவதற்காக, இம்மாதம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்துகிறது.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில் புதிதாக தொழில் துவங்கவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும், 'டிக்' எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் கடன் வழங்குகிறது.
அதன்படி, ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம், 59 கோடி ரூபாய் வரை பல்வேறு பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது.
இதற்கான வட்டி, 11.50 சதவீதத்தில் இருந்து 10.95 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு அரசு, மானியத்துடன் கடன் வழங்குகிறது. எனவே, இத்திட்டங்களில் அதிகளவில் கடன் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்காக, இம்மாதம் மாநிலம் முழுதும், 'டிக்'கின், 22 கிளைகள், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவன தொழிற்பேட்டைகள், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவன தொழில் பூங்காக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் போன்றவற்றில் கடன் சிறப்பு முகாமை, தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து, 'டிக்' நிறுவனம் நடத்துகிறது.