ADDED : பிப் 13, 2025 10:55 PM

சென்னை:சிறுதொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிகளவில் பொருட்களை விற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த, மத்திய அரசு ஜெம் போர்ட்டல் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதில் பதிவு செய்வதற்கு உதவ தமிழக அரசு, மாநிலம் முழுதும் சிறப்பு முகாம்களை நடத்துகிறது. இந்த முகாம், மதுரை கப்பலுார் தொழிற்பேட்டையில் இன்று நடக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின், 'ஜெம் போர்ட்டல்' இணையதளம் வாயிலாக, 'டெண்டர்' கோரி, சிறுதொழில் நிறுவனங்களிடம் பொருட்களை வாங்குகின்றன. தமிழகத்தில் உள்ள பல நிறுவனங்களுக்கு, ஜெம் போர்ட்டலில் பதிவு செய்யவும், தயாரிப்புகள் விபரம் குறித்த அட்ட வணையை பதிவேற்றம் செய்யவும் தெரியவில்லை.
இதனால், நாட்டில் சிறு நிறுவனங்கள் அதிகம் இருப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தும், ஜெம் போர்ட்டல் வாயிலாக, 2016ல் இருந்து கடந்த ஆண்டு வரை, பொதுத்துறை நிறுவனங்கள், 40 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை வாங்கியதில், தமிழகத்தின் பங்கு 5 சதவீதம் மட்டுமே உள்ளது.
எனவே, ஜெம் போர்ட்டல் பதிவு செய்வதற்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு சிறுதொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை ஆணையரகம் சார்பில், ஜெம் போர்ட்டலில் பதிவு செய்வதற்கு உதவி செய்யும் வகையில், மாநிலம் முழுதும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, மதுரை மாவட்டம், கப்பலுார் தொழிற்பேட்டையில் இன்று முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள பல நிறுவனங்களுக்கு, ஜெம் போர்ட்டலில் பதிவு செய்யவும், தயாரிப்புகள் விபரம் குறித்த அட்டவணையை பதிவேற்றம் செய்யவும் தெரியவில்லை