'அன்லிஸ்டட்' கம்பெனி பங்கு ஐந்தடி தள்ளி நில்லுங்கள்
'அன்லிஸ்டட்' கம்பெனி பங்கு ஐந்தடி தள்ளி நில்லுங்கள்
ADDED : மார் 08, 2026 01:26 AM

பட்டியலிடப்படாத என்.எஸ்.இ., இந்தியா பங்குகளை விற்பனை செய்வதாக கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் வசூலித்ததாக கூறப்படும் மோசடி தொடர்பாக, மும்பை மற்றும் சென்னையின் பல இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
விசாரணையில், சில நிறுவனங்களும் தனிநபர்களும் என்.எஸ்.இ.,யின் பட்டியலிடப்படாத பங்குகளை ஒதுக்கீடு செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து முதலீட்டாளர்களிடமிருந்து பெரிய தொகையை பெற்றது தெரிய வந்துள்ளது.
'அட்டம் கேபிடல், ஆப்டிமஸ் பைனான்சியல் சொல்யூஷன்ஸ், பாப்லி இன்வெஸ்ட்மென்ட் மற்றும் சுப்ரீமஸ் ஏஞ்சல்' ஆகிய நிறுவனங்கள் விசாரணை வளையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
சதீஷ்குமார், சஞ்சய் தாமனி, நீரஜ் நிசார், கிரிஷ் வோரா, மனிஷ் சோனி, நிஷா குமாரி ஆகிய தனிநபர்களிடமும் விசாரணை நடக்கிறது.
பொதுவாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகள் 'ப்ரீ- ஐ.பி.ஓ., அல்லது பட்டியலிடப்படாத பங்குகள்' என அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க காரணம் என்ன என்றும் அதில் உள்ள ரிஸ்க் மற்றும் ஏற்கனவே வாங்கியவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சிவராம் விளக்கியுள்ளார்.
வாங்க ஆர்வம் ஏன்?
ஐ.பி.ஓ.,வுக்கு முன்பே குறைந்த விலையில் பங்குகளை வாங்கி, பட்டியலிடும்போது அதிக லாபம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு
முதலீட்டாளர்களை ஈர்க்கும் சில பிரபல நிறுவனங்களின் வளர்ச்சி( உதாரணத்துக்கு, எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட், என்.எஸ்.இ.,(இதுவரை ஐ.பி.ஓ.,வுக்கு வரவில்லை, தயாராகி வருகிறது)
எதிர்காலத்தில் ஐ.பி.ஓ.,வுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிறுவனங்கள் பட்டியலிடப்படாத சந்தையில் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. (உதாரணத்துக்கு, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், போன்பே, பிளிப்கார்ட், போட்)
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது
நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வ இடைத்தரகர்கள் வாயிலாக மட்டுமே பட்டியலிடப்படாத பங்கு வாங்க வேண்டும்
அறியப்படாத நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டாம்
பங்குகள் உண்மையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாங்கியிருந்தால் என்ன செய்வது?
பங்குகள் தங்களது டிமேட் கணக்கில் பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
பரிவர்த்தனை ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்
ஏதேனும் சந்தேகம் இருந்தால் கட்டுப்பாட்டு அமைப்புகள் அல்லது சட்ட ஆலோசகர்களை அணுக வேண்டும்.

