'பின்டெக் சிட்டி'யில் நட்சத்திர ஹோட்டல் 2.38 ஏக்கர் 154 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு
'பின்டெக் சிட்டி'யில் நட்சத்திர ஹோட்டல் 2.38 ஏக்கர் 154 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு
UPDATED : பிப் 22, 2026 02:30 AM
ADDED : பிப் 22, 2026 02:11 AM

சென்னை: சென்னை நந்தம்பாக்கம், 'பின்டெக் சிட்டி'யில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்கான நிலத்தை குத்தகை வழங்குவதற்கான டெண்டரில், மேகாலயா ஹோட்டல்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது. அங்கு, 2.38 ஏக்கர் நிலத்துக்கு, 154 கோடி ரூபாய் விலை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச நிதி, காப்பீடு, வங்கி ஆகிய நிதி துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 110 ஏக்கரில், 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரை, 'டிட்கோ' அமைக்கிறது.
பின்டெக் சிட்டியில், தனியார் நிறுவனங்கள் நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்காக, 2.38 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஏக்கருக்கு, 65 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து, அதை விட அதிக விலை கோருபவருக்கு ஒதுக்கீடு செய்ய டிட்கோ, கடந்த ஆண்டு இறுதியில், 'டெண்டர்' கோரியது.
அதில் பங்கேற்ற நிறுவனங்களின் டெண்டர் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டதில், தற்போது, மேகாலயா ஹோட்டல்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளது.
அந்நிறுவனத்துக்கு, நில ஒதுக்கீட்டு ஆணை இந்த வாரத்தில் வழங்கப்பட உள்ளது.
நட்சத்திர ஹோட்டல் கட்டப்பட உள்ள, 2.38 ஏக்கர் நிலத்தை இந்நிறுவனம் 154 கோடி ரூபாய் டெண்டர் எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
நிதி சார்ந்த நிறுவனங்களுக்காக நந்தம்பாக்கத்தில் பின்டெக் சிட்டி 110 ஏக்கரில் அமையும் வளாகத்தில், நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகள் குத்தகை நட்சத்திர ஹோட்டல் கட்ட டெண்டர் எடுத்த மேகாலயா ஹோட்டல்ஸ்

