ADDED : மார் 14, 2024 02:34 AM

சென்னை: தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம், புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு, சந்தை வாய்ப்பு, தொழில் ஆலோசனை உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றன.
தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், இணையதளம் உருவாக்கம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவை, விளம்பரம், மனிதவளம், சட்ட ஆலோசனை, நிதி ஆலோசனை உள்ளிட்ட சேவைகளுக்கு அதிகம் செலவு செய்கின்றன.
எனவே, அந்நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான துவக்க நிலைக்கான சேவைகள் சலுகை விலையில் கிடைக்க, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதை, சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பிப்., 7ல் துவக்கி வைத்தார்.
இதுவரை, இந்த ஸ்மார்ட் கார்டுகளை கிட்டத்தட்ட 150 நிறுவனங்கள் பெற்றுள்ளன.
இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் கார்டுக்கு, ஸ்டார்ட் அப் டி.என்., இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரசு வழங்கும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்களிடம் சலுகை விலையில் சேவைகளை பெறலாம். இதனால் இதற்கு, பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்' என்றார்.

