ரூ.5 லட்சம் வரை நிதியுதவி பெற 'ஸ்டார்ட் அப்'களுக்கு அழைப்பு
ரூ.5 லட்சம் வரை நிதியுதவி பெற 'ஸ்டார்ட் அப்'களுக்கு அழைப்பு
ADDED : அக் 30, 2025 02:49 AM

சென்னை:தமிழக தொழில்நுட்ப துறையை சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப துறையில் செயல்படும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, இணைய சேவைகள் மற்றும், 'டேட்டா ஸ்டோரேஜ்' எனப்படும் தரவு கட்டமைப்பு ஆகியவற்றுக்கு அதிக செலவாகிறது.
இதற்காக, இந்நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை, மூன்று ஆண்டுகளுக்கு நிதி வழங்க, தமிழக புத்தொழில் தரவு மைய சேவை திட்டத்தை, 'எல்காட்' எனப்படும் தமிழக மின்னணு நிறுவனம் துவக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு இந்தாண்டில், 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஸ்டார்ட் அப்களிடம் இருந்து பெற்று எல்காட்டிற்கு, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்க உள்ளது. அதன்படி, தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்ப படிவம் பதிவிறக்கத்துக்கு
form.startuptn.in/SDVS
கூடுதல் தகவல்களை பெறுவதற்கு
support@startuptn.in

