UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 06:46 PM
ஜம்மு-காஷ்மீர்
சர்வதேச சந்தையை நோக்கி காஷ்மீர் பொருட்கள்
காஷ்மீரில் தயாரிக்கப்படும் வேளாண் மற்றும் கைவினைப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு மற்றும் டிரேட் புரமோஷன் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகர்கள் - விற்பனையாளர்கள் சந்திப்பில் 17 நாடுகளைச் சேர்ந்த 36 சர்வதேச வர்த்தகர்கள் பங்கேற்றனர். இதில் 60க்கும் மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தின.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தி, காஷ்மீர் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
வடகிழக்கு மாநிலங்கள்
வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.42.63 கோடி ஒதுக்கீடு
வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக வடகிழக்கு கவுன்சில், செப்டம்பர் மாதத்தில் 42.63 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது.
இதில் 8 மாநிலங்களின் திட்டங்களுக்கு 35.21 கோடி ரூபாயும், உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் திறன் மேம்பாடு, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களுக்கு 7.42 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாகாலாந்துக்கு 11.92 கோடி ரூபாய் மாநிலத்தில் உள்ள காபி உற்பத்தி, அதன் உட்கட்டமைப்பு வசதி பெருக்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்
3.44 லட்சம் டன் நெல் கொள்முதல்
பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டின் கொள்முதல் சீசன் துவங்கியதில் இருந்து இதுவரை விவசாய சந்தைக்கு வந்த 3.83 லட்சம் மெட்ரிக் டன் நெல்லில், 3.44 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை மாநில அரசின் கொள்முதல் நிறுவனங்கள் கொள்முதல் செய்துள்ளன. இதற்காக விவசாயிகளுக்கு 188 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில உணவு, மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் லால் சந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஒதுக்கீட்டுக்கான நெல் கொள்முதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 180 லட்சம் மெட்ரிக் டன் நெல்லையும் மாநிலம் எட்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
