ADDED : ஆக 22, 2025 12:31 AM

சிக்சர் அடித்த சந்தைகள்
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தன. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. இருப்பினும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கினர்.
இதனால், சற்று நேரத்திலேயே சந்தை குறியீடுகள் உயர்வுக்கு திரும்பின. இதனிடையே ஜி.எஸ்.டி., அடுக்குகளை நான்கில் இருந்து இரண்டாக குறைக்க, ஜி.எஸ்.டி., அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது. நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 373 புள்ளிகள் வரை உயர்வு கண்ட நிலையில், முடிவில் சற்று குறைந்து, 143 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. தொடர்ச்சியாக, ஆறாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் வணிகத்தை நிறைவு செய்தன.
உலக சந்தைகள்
புதனன்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்;
ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பியசந்தைகள் சரிவுடன்வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1 ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் மேற்கொள்ள அமைச்சர்கள் குழு ஒப்புதல்
2 முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,247 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.90 சதவீதம் அதிகரித்து, 67.44 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 பைசா சரிந்து, 87.25 ரூபாயாக இருந்தது.