மானியம் குறைத்தும் பாதிப்பில்லை: மின்வாகன விற்பனை அதிகரிப்பு
மானியம் குறைத்தும் பாதிப்பில்லை: மின்வாகன விற்பனை அதிகரிப்பு
ADDED : பிப் 13, 2024 05:45 AM

புதுடில்லி : மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் குறைக்கப்பட்ட போதிலும், அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது: நாட்டில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க, மத்திய அரசு, கடந்த 2015ம் ஆண்டில், 'பேம்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில், 'பேம் 2' திட்டம், 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் மின்சார இரு சக்கர வாகன விலையில், 40 சதவீத மாக இருந்த மானிய தொகை, கடந்த ஆண்டு 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. 1 கிலோ வாட் பேட்டரிக்கான மானிய தொகை 15,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.
இந்நடவடிக்கையால், மின்சார இரு சக்கர வாகனங் களின் விற்பனை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், தற்போது விற்பனை அதிகரித்துள்ளது.
அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் இதுவரை கிட்டத்தட்ட 7.34 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட, 7.28 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களை விட அதிகமாக உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.