எத்தனால் உற்பத்தி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கியது மத்திய அரசு சர்க்கரை தொழில்துறையினர் வரவேற்பு
எத்தனால் உற்பத்தி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கியது மத்திய அரசு சர்க்கரை தொழில்துறையினர் வரவேற்பு
ADDED : செப் 02, 2025 11:50 PM

புதுடில்லி:சர்க்கரை ஆலைகள் மற்றும் டிஸ்டில்லரிகள், எத்தனால் உற்பத்தி செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் எத்தனால் வினியோக ஆண்டிலிருந்து எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய சர்க்கரை, கரும்பு சாறு உள்ளிட்டவற்றுக்கு எந்த வித அளவு கட்டுப்பாடும் கிடையாது என, மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் அடுத்த அக்டோபர் மாதம் வரை எத்தனால் வினியோக ஆண்டாக கணக்கிடப்படுகிறது. நடப்பு எத்தனால் வினியோக ஆண்டில், எத்தனால் உற்பத்திக்கு 40 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், 'வரும் எத்தனால் வினியோக ஆண்டிலிருந்து, கரும்பு சாறு, பி மற்றும் சி கனமான வெல்லப்பாகுகளில் இருந்து எத்தனால் தயாரிக்க எந்த வித கட்டுப்பாடும் கிடையாது' என உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி மற்றும் சி கனமான வெல்லப்பாகுகள் என்பது, சர்க்கரை சுத்திகரிப்பிலிருந்து கிடைக்கும் துணைப் பொருட்களாகும்.
எனினும், உள்நாட்டு சந்தையில் சர்க்கரை வினியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக, எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சர்க்கரை அளவு குறித்து அவ்வப்போது பெட்ரோலியத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால கலந்த பெட்ரோலை தான் விற்பனை செய்து வருகின்றன.
கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனங்களின் சராசரி எத்தனால் கலப்பு 19.05 சதவீதமாக உள்ளது.
தேசிய பயோ எரிபொருள் கொள்கை 2018ன் படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் வேகமெடுத்ததைத் தொடர்ந்து, அடுத்த அக்டோபர் மாதத்துக்குள் இந்த இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனிடையே, மத்திய அரசின் இந்த முடிவுக்கு சர்க்கரை தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது விவசாயிகளுக்கு அடித்த 'ஜாக்பாட்' என்றும், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பேமென்ட்கள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்வதோடு, சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்க உதவும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.