'சாட்டிலைட் இன்டர்நெட்' சேவைக்கு உரிமம் அம்பானிக்கு ஆதரவு தெரிவித்த சுனில் மிட்டல்
'சாட்டிலைட் இன்டர்நெட்' சேவைக்கு உரிமம் அம்பானிக்கு ஆதரவு தெரிவித்த சுனில் மிட்டல்
ADDED : அக் 15, 2024 10:25 PM

புதுடில்லி:செயற்கைக்கோள் வழி இணையசேவை அளிக்க முன்வரும் நிறுவனங்களுக்கும், தொலைதொடர்பு நிறுவனங்களைப் போல, அலைக்கற்றை ஏலம் போன்ற நடைமுறையில் உரிமம் வழங்க வேண்டும் என, பார்தி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பார்தி மிட்டல் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்குவதற்கான அகண்ட அலைவரிசையை, நிறுவனங்களுக்கு ஏலம் நடத்தி வழங்காமல், ஒதுக்கீடு முறையில் வழங்கலாம் என டிராய் பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலும் ஒதுக்கீடு கூடாது என தெரிவித்துள்ளார்.
டில்லியில், இந்திய மொபைல் கான்பரன்சில் இதுகுறித்து சுனில் மிட்டல் பேசியதாவது:
நகர்ப்புறங்களில் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க விரும்பும் செயற்கைக்கோள் வழி இணைய நிறுவனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்களைப் போலவே, உரிமக் கட்டணம் செலுத்தச் செய்ய வேண்டும்.
தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான விதிகள் அனைத்தும் அவற்றுக்கும் பொருந்தும். அலைக்கற்றை உரிமத்தை, செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களும் விலை கொடுத்து வாங்க வேண்டும்.
தொலைதொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க்கை பணம் செலுத்தி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'வயாசாட், ஓம் டெலிகாம், சிபி டெக்னாலஜிஸ்' உள்ளிட்ட சில செயற்கைக்கோள் வழி இணைய நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இதுபோன்ற சேவையை அளிக்கும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனமும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, ஜியோ நிறுவனம் கடந்த வாரம் எழுதிய கடிதத்தில், செயற்கைக்கோள் வழி அகண்ட அலைவரிசைக்கு ஏலம் நடத்தாமல், ஒதுக்கீடு செய்ய டிராய் செய்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பார்தி ஏர்டெல் நிறுவனத் தலைவர் மிட்டல், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.