காசோலை மோசடி வழக்குகள் விரைந்து தீர்க்க வழிமுறைகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு
காசோலை மோசடி வழக்குகள் விரைந்து தீர்க்க வழிமுறைகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு
ADDED : அக் 02, 2025 11:40 PM

நா டெங்கும் பல்வேறு நீதிமன்றங்களில் மலையென தேங்கியுள்ள காசோலை மோசடி வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன், என்.வி.அஞ்சரையா ஆகியோர், புதிய வழிமுறைகளை வகுத்துள்ளனர்.
நம் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், 43 லட்சம் காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, பார்லிமென்ட் கேள்வி ஒன்றுக்கு, எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 6.40 லட்சம் நிலுவை வழக்குகளோடு ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்க, அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா, குஜராத், டில்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன.
காசோலை மோசடி வழக்குகள் மட்டும் இவ்வளவு அதிகமாக தேங்கி இருப்பது, நீதிமன்றங்களின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஒருசில மாநிலங்களில், நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில், காசோலை மோசடி வழக்குகள் மட்டும், 50 சதவீதம் அளவுக்கு இருக்கின்றன என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
தேங்கியுள்ள இத்தகைய வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கு, நீதிபதிகள் சில வழிமுறைகளை வழங்கினர். குறிப்பாக, வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, வழக்கமான முறையில் சம்மன் அனுப்புவதோடு, மின்னணு முறையையும் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்வதற்கு வசதியாக, புகாரைப் பதிவு செய்யும்போதே, தொடர்புடைய நபர்களின் மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் எண், வாட்ஸாப் எண், வேறு தொடர்பு விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இதேபோல், நீதிமன்றங்கள், கியூ.ஆர்., கோடு மற்றும் யு.பி.ஐ., இணைப்புகளையும் உருவாக்கி வழங்க வேண்டும். தீர்ப்புக்குப் பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கு இந்த நவீன வசதிகளை வழக்குதாரர்கள் பயன்படுத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், டில்லி, மும்பை, கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், நிர்வாக ரீதியான குழுக்களை நியமித்து, தேங்கியிருக்கும் காசோலை மோசடி வழக்குகளை பட்டியலிட்டு, அவற்றை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வழிவகை காண வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.