சிறகுகள் முறிந்த 'ஜெட் ஏர்வேஸ்' சொத்துக்களை விற்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிறகுகள் முறிந்த 'ஜெட் ஏர்வேஸ்' சொத்துக்களை விற்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 07, 2024 11:20 PM

புதுடில்லி:கைவிடப்பட்ட தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் சொத்துக்களை விற்று, கடன்களை அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு விமான சேவையை நிறுத்தியது.
கடன் சுமை 7,500 கோடியை தொட்ட நிலையில், கடனளித்த வங்கிகள், நிறுவனங்கள், தங்களுக்கு சேர வேண்டிய நிலுவையை செலுத்தக் கோரி அழுத்தம் தந்த நிலையில், இது குறித்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முராரி லால் ஜலான் என்பவரின் ஜே.கே.சி., நிறுவனம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 'கல்ராக் கேப்பிடல்' நிறுவனம் ஆகியவை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்த முன்வந்த நிலையில், அதை ஏற்று, 2021ல் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
ஆனால், ஆண்டுகள் கழிந்தும், 350 கோடி ரூபாய் நிலுவையை திரும்பச் செலுத்தவும்; வங்கி உத்தரவாதங்களை பெற்றுத் தரவும் அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து கடன் வழங்கிய வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
ஜே.கே.சி., நிறுவனத்துக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவன உரிமையை மாற்றுவதற்கான தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் அனுமதியை ரத்து செய்த நீதிமன்றம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று, கடன் வழங்கிய வங்கிகள், நிறுவனங்களுக்கு செலுத்த உத்தரவிட்டது.
அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
2010- குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் போட்டியால், நிதி நெருக்கடி.
2019- ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல், சேவை முடங்கியது.
2021- வேறு முதலீட்டாளர்களுக்கு உரிமை மாற்றிக் கொள்ள, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் அனுமதி.
2023- மீட்பு நடவடிக்கை ஸ்தம்பித்ததால், தீர்ப்பாய அனுமதியை எதிர்த்து வங்கிகள் வழக்கு
2024- சொத்துக்களை விற்று கடனை அடைக்க நீதிமன்றம் தீர்ப்பு.
சிறு முதலீட்டாளர்களின் கதி?