வரி கணக்கு தாக்கலில் பிழை திருத்தம் அபராதம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை
வரி கணக்கு தாக்கலில் பிழை திருத்தம் அபராதம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை
ADDED : மார் 27, 2025 12:08 AM

புதுடில்லி:வரி கணக்கு தாக்கலில் தவறு நேர்ந்திருந்தால், அபராதமின்றி திருத்திக்கொள்ளும் வசதி அளிக்குமாறு, மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரி செலுத்தும் வர்த்தக நிறுவனங்கள் தாக்கல் செய்யும் படிவங்களில், தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை திருத்துவதற்கு, மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத் துறை அபராதம் விதிக்கிறது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அபராதமின்றி பிழைகளை திருத்தம் செய்துகொள்வதற்கு, வணிகர்களுக்கு அடிப்படை உரிமை இருப்பதாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:
படிவங்களை தாக்கல் செய்யும்போது எழுத்து மற்றும் கணிதப் பிழைகள் ஏற்படுவது இயல்பானது. மனிதத் தவறு என்பது தவிர்க்க முடியாதது என்ற நிலையில், அதற்காக வணிகர்களிடம் அபராதம் வசூலித்தால், அதன் தாக்கம், வினியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோர் வரை பாதிக்கும்.
எனவே, வரி கணக்கு தாக்கலில் ஏற்படும் எழுத்துப் பிழைகள், கணிதப் பிழைகளை அபராதமின்றி திருத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, செலுத்த வேண்டிய வரித்தொகையில் மாற்றம் நேரிடாத, பிழை திருத்தங்களுக்கு அபராதம் வசூலிக்கக்கூடாது.
வரி கணக்கு தாக்கல் படிவங்களை மறுஆய்வு செய்து, திருத்தங்கள் இருந்தால் அதை மேற்கொள்ளத் தேவையான கால அவகாசத்துக்கான அட்டவணையை, மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத் துறை வெளியிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.