ADDED : டிச 22, 2024 01:53 AM

சென்னை:ஜப்பான் நாட்டை சேர்ந்த டோயாமாவில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பது தொடர்பாக, தொழில் துறை அமைச்சர் ராஜா, சென்னையில் நேற்று முன்தினம் அம்மாகாண கவர்னர் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இதுகுறித்து,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜப்பானின் டோயாமா மாகாணத்தின் கவர்னர் ஹச்சிரோ நிட்டா மற்றும் அம்மாகாண பிரதிநிதிகளுடன், தொழில் துறை ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்பு, அறிவு பரிமாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தமிழகம் மற்றும் டோயாமா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
மேம்பட்ட உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மையமாக தமிழகம் உருவெடுக்கும் வாய்ப்புகளையும், மருத்துவம் மற்றும் உயிர் அறிவியல் துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில், ஜப்பானின் பல பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துஉள்ளன. ஏற்கனவே, அந்நாட்டின் ஹிரோஷிமா, எஹிம், கோச்சி மற்றும் ஒசாகா மாகாணங்களுடன் தமிழகம் இணைந்து செயல்படுகிறது.
தமிழகம், ஜப்பான் உறவுக்கு பெரிய எதிர்காலம் உள்ளது. இந்த பேச்சு, தமிழகம் மற்றும் டோயாமா ஆகிய இரண்டுக்கும் பயனளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.