தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள சுவீடன் நிறுவனங்களுடன் பேச்சு
தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள சுவீடன் நிறுவனங்களுடன் பேச்சு
ADDED : நவ 14, 2024 03:16 AM

சென்னை:தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு, சுவீடன் நாட்டு நிறுவனங்களுடன், தொழில் துறை அமைச்சர் ராஜா பேச்சு நடத்தியுள்ளார்.
தமிழக அரசு, வரும் 2030க்குள், தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, 84 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக உயர்த்த, இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக, பல்வேறு நிறுவனங்களின் தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, சுவீடன் நாட்டு நிறுவனங்களுடன், தொழில் துறை அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு ஆகியோர், சென்னையில் நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதில், இந்தியாவுக்கான சுவீடன் நாட்டு துாதர் ஜேன் தெஸ்லெப் மற்றும் ஸ்வீடனை சேர்ந்த, 14 நிறுவனங்கள் பங்கேற்றன.
இவற்றில் சில நிறுவனங்கள், தமிழகத்தில் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட தொழில்களில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளன.
இதுகுறித்து, அமைச்சர் ராஜா அறிக்கையில், “தமிழகம், சுவீடன் இடையே நீண்டகாலமாக உற்பத்தி துறையில் வலுவான உறவு உள்ளது. சமீபத்தில், சுவீடனை சேர்ந்த பல நிறுவனங்கள், சர்வதேச திறன் மையங்களை அமைக்க, தமிழகத்தை தேர்வு செய்துள்ளன.
“வரும் காலங்களில் இரு தரப்புக்கும் இடையேயான உறவு, பசுமை மின் திட்டங்கள் போன்ற புதிய துறைகளிலும் வலுப்பெறும்” என, தெரிவித்து உள்ளார்.
தொழில்துறை அமைச்சர் ராஜா, சுவீடனை சேர்ந்த 14 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்