தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்காக ஐரோப்பிய யூனியனுடன் இன்று பேச்சு
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்காக ஐரோப்பிய யூனியனுடன் இன்று பேச்சு
ADDED : மே 11, 2025 11:30 PM

புதுடில்லி:இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான அடுத்த சுற்று பேச்சு இன்று துவங்குகிறது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சின் முதல் கட்டத்தை விரைவில் முடிக்கும் வகையில், அதற்கான இறுதி சுற்று பேச்சு இன்று துவங்கி, வருகிற 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் வரி நடவடிக்கையால் நிலவும் நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தக சூழலைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்தத்தை இரு கட்டங்களாக முடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தியாவும், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் குழுவும் மேற்கொண்ட பேச்சு, கடந்த 2013ம் ஆண்டு ஒரு சில காரணங்களினால் தடைபட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பேச்சு 2022 ஜூனில் துவங்கின.
இதையடுத்து, நடப்பாண்டு பிப்ரவரி 28ம் தேதி, பிரதமர் மோடியும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கும் இடையே நடந்த சந்திப்பில், வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தாண்டு இறுதிக்குள் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர்.
கடந்த 2023 - 24ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனுடனான இந்தியாவின் இருதரப்பு சரக்கு வர்த்தகம் 11.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் ஏற்றுமதி 6.45 லட்சம் கோடி ரூபாயாகவும், இறக்குமதி 5.23 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய யூனியன் சுமார் 17 சதவீதத்தை கொண்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவிற்கான ஏற்றுமதி அதன் மொத்த ஏற்றுமதியில் 9 சதவீதமாகும்.
கடந்த 6ம் தேதி, இந்தியாவும், பிரிட்டனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சின் முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.