ADDED : மார் 15, 2024 01:26 AM

சென்னை:''தமிழகம், வாய்ப்புகள், கண்டுபிடிப்புகள், முதலீடுகள் ஆகியவற்றிற்கான மாநிலமாக திகழ்கிறது,'' என, தமிழக நிதி துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சார்பில், 'தமிழகம் - மாநிலத்தின் எதிர்காலம்' எனும் கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று 'தமிழகம் 100' எனும் தொலைநோக்கு ஆவணத்தை உதயசந்திரன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., சென்னை இயக்குனர் காமகோடி பேசியதாவது:
தமிழகம், 1 டிரில்லியன் டாலர் அதாவது, 83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரத்தை நோக்கி வேகமாக செல்கிறது. அதை அடைய, புதிய தொழில்முனைவோரை உருவாக்குவது அவசியம். இதில் 'நான் முதல்வன்' திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். அதை செயல்படுத்துவதில் ஐ.ஐ.டி., முக்கிய பங்கு வகிக்கிறது.
கூட்டங்களை நடத்தி, பெரிய தொழில் நிறுவனங்களும்; சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும், தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உதயசந்திரன் பேசியதாவது:
நாட்டிலேயே, அதிகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழகம். ஒவ்வொரு துறையிலும் பெரிய வாய்ப்புகள் உள்ளன. காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மின்சார வாகன உற்பத்தியிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சில துறைகளில் முதலீடுகள் குவிந்தாலும், மாநிலத்தின் பொருளாதாரம் ஒரு துறை சார்ந்த பொருளாதாரம் அல்ல என்பதை உணர்ந்துள்ளோம்.
உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், மின்சார வாகனம் என, அனைத்து துறைளின் கலவையாக ஒருங்கிணைந்து உள்ளது. தமிழகம், வாய்ப்புகள், கண்டுபிடிப்புகள், முதலீடுகளுக்கான மாநிலமாக திகழ்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ., தமிழக தலைவர் சங்கர் வாணவராயர், தென் மண்டல துணை தலைவர் நந்தினி, தமிழக துணை தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் உட்பட பலர் பங்கேற்றனர்.

