'சிறிய டெண்டரில் பங்கேற்பதற்கு கூட தமிழக நிறுவனங்கள் பயப்படுகின்றன'
'சிறிய டெண்டரில் பங்கேற்பதற்கு கூட தமிழக நிறுவனங்கள் பயப்படுகின்றன'
ADDED : டிச 28, 2024 12:45 AM

சென்னை:''சிறு தொழில் நிறுவனங்கள், தரமான பொருட்களை உற்பத்தி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்; தர நிர்ணய அனுமதி வாங்குவது மிகவும் சுலபமாக்கப்பட்டு உள்ளது,'' என, இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் சென்னை துணை இயக்குனர் ஜெனரல் பவானி தெரிவித்தார்.
தமிழக சிறு மற்றும் குறுந்தொழில் சங்கமான, 'டான்ஸ்டியா' சார்பில், சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து, பொதுத்துறை நிறுவனங்கள் அதிக பொருட்களை வாங்குவதற்காக, 'சவ்மெக்ஸ் - 2024' தொழில் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் துவங்கியது.
நாளை வரை நடக்கும் கண்காட்சியில், 200 சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும், 25 பொதுத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளின் கண்காட்சி அரங்குள் இடம்பெற்றுள்ளன.
நேற்று நடந்த துவக்க விழாவில், சங்க தலைவர் மோகன் பேசும்போது, ''பொதுத்துறை நிறுவனங்கள், தமிழக சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்குவது குறைவாக உள்ளது; இந்த இடைவெளியை குறைத்து, அதிகம் வாங்குவதற்கு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,'' என்றார்.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சக மண்டல இணை இயக்குனர் சுரேஷ் பேசியதாவது:
ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் இருந்து, சந்தைப்படுத்தும் வரை தேவைப்படும் உதவிகளை அரசு செய்கிறது; இவற்றை, சிறு தொழில்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங் கள், 'ஜெம் போர்ட்டல்' வாயிலாகவே பொருட்களை வாங்குகின்றன. இந்த போர்ட்டலில் சிறு நிறுவனங் கள் பதிவு செய்து, பொருட்களை விற்க வேண்டும்.
போர்ட்டலில், 100 நாற்காலிகள் வாங்க, 'டெண்டர்' கோரினாலும், வட மாநில நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தமிழக நிறுவனங்கள் பயப்படுகின்றன. போர்ட்டலில் பதிவு செய்து, அதிக வணிகம் மேற்கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பவானி பேசியதாவது:
தொழிலுக்கு தரம் கட்டாயம் வேண்டும்; தரமாக உற்பத்தி செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால், கஷ்டமே கிடையாது. ஒரு பொருளுக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம் கட்டாயம் தேவையில்லை என்றாலும், தரமானதாகவே சப்ளை செய்ய வேண்டும்.
தற்போது, ஐ.எஸ்.ஐ., உரிமம் வாங்குவது எளிமையாக்கப்பட்டு உள்ளது. சிறு தொழில் நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோருக்கு உரிமம் வழங்குவதில் பல சலுகைகள் உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
செயலர் வாசுதேவன் பேசியதாவது:
பொதுத்துறை நிறுவனங் கள், 'ஜெம் போர்ட்டலில்' இதுவரை, 40 லட்சம் கோடி ரூபாய்க்கு, சிறு தொழில்களிடம் இருந்து பொருட்களை வாங்கியுள்ளன. அதில், 4 சதவீதம் தான் தமிழக நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
சிறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலை அதிகரிக்கவே, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுத்துறை நிறுவனங்கள் 40 லட்சம் கோடி ரூபாய்க்கு, சிறு தொழில்களிடமிருந்து பொருட்களை வாங்கியுள்ளன. அதில், 4% தான் தமிழக நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன