மின்வாகன துறையில் முன்னிலை பெற உலக வங்கியுடன் தமிழகம் ஆலோசனை
மின்வாகன துறையில் முன்னிலை பெற உலக வங்கியுடன் தமிழகம் ஆலோசனை
ADDED : நவ 21, 2024 10:16 PM

சென்னை:மின்சார வாகன துறையிலும் முதலிடம் வகிக்கும் நோக்கில், அதற்கான திட்ட வரைபடத்தை தயாரிப்பதற்கு, உலக வங்கியை அணுக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழகம், மின்சார வாகன தயாரிப்பிலும் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.
இதன் தொடர்ச்சியாக, உலக வங்கியின் அதிகாரி கள் இன்று சென்னை வரவுள்ளதாகவும்; அவர்களை வாகனத் துறை மற்றும் அரசுத் துறைகளின் அதிகாரிகள் பலர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான 'டான்ஜெட்கோ' மற்றும் முதலீட்டாளர்கள் உதவி மையமான 'கெய்டன்ஸ்' உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், உலக வங்கி அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் மின்சார வாகன போக்குவரத்தை அதிகரிக்க உதவும் வகையில், பேட்டரி சக்தி சேமிப்பகத்தை ஏற்படுத்த, பாரத ஸ்டேட் வங்கிக்கு 8,400 கோடி ரூபாய் கடன் வழங்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது.
அண்மையில், இந்தியாவில் கார்பன் குறைப்பு பணிகளை மேம்படுத்த, உலக வங்கி 12,000 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், வாகன உற்பத்தித் துறையில் தமிழகத்தின் ஆதிக்கம் தொடரும் வகையில், மின்சார வாகன உற்பத்தி திட்டங்களில் உலக வங்கியின் உதவியை நாட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மின்வாகன மையம் ஏற்படுத்த சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம் நகரங்கள் தேர்வு
பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், உதிரிபாக சப்ளை நெட்வொர்க் ஆகியவை தமிழகத்துக்கு சாதகம்
நாட்டின் மின்சார டூ-வீலர்கள் தயாரிப்பில் தமிழகம் ஏற்கனவே 70 சதவீதம் பங்கு வகிக்கிறது.