முதலீட்டை ஈர்க்க முயற்சி தமிழக குழு வியட்நாம் பயணம்
முதலீட்டை ஈர்க்க முயற்சி தமிழக குழு வியட்நாம் பயணம்
ADDED : மே 17, 2025 12:01 AM

சென்னை:வியட்நாமில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, அமைச்சர் ராஜா தலைமையிலான குழு, அந்நாட்டிற்கு சென்றுள்ளது.
தமிழகத்தை, 2030க்குள் ஒரு டிரில்லியன் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக உருவெடுக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் பணி நடக்கிறது.
வியட்நாமை சேர்ந்த, 'வின்பாஸ்ட்' நிறுவனம், தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டம், 'சிப்காட்' தொழில் பூங்காவில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார கார் உற்பத்தி செய்யும் ஆலையை அமைத்து வருகிறது. இதற்கு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆலையில் முதல் கட்ட உற்பத்தி வரும் ஜூன் அல்லது ஜூலைக்குள் துவக்கப்பட இருப்பதாக, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்திருந்தார். வியட்நாமில் உள்ள எலக்ட்ரானிக்ஸ், காலணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க, அந்நாட்டிற்கு அமைச்சர் ராஜா தலைமையில் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு, நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளது.
ஒரு வார பயணமாக சென்றுள்ள இக்குழு, வியட்நாமில் தொழில் நிறுவனங்களின் பிரநிதிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளது.