ADDED : மார் 15, 2025 10:29 PM

சென்னை,:தமிழக பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதி திட்டத்தின் கீழ், நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 5.20 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஆணையை அமைச்சர் அன்பரசன், சென்னையில் நேற்று வழங்கினார்.
அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் தமிழக பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதி திட்டத்தின் கீழ், புத்தொழில் நிறுவனங்களுக்கு, பங்கு முதலீடு அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கி வருகிறது.
அதன்படி, சென்னையை சேர்ந்த, 'விசய் இன்ஜினியரிங்' 1.60 கோடி ரூபாய்; செங்கல்பட்டை சேர்ந்த, 'அக்ரிபேக்சர் இந்தியா' 2 கோடி ரூபாய்; சென்னையை சேர்ந்த, 'யோர்கர்ஸ் ஸ்போஸ்ட்ஸ் அனலிடிக்ஸ்' 1 கோடி ரூபாய்; பெரம்பலுாரை சேர்ந்த, 'லடி ஹேண்டிகிராப்ட்ஸ்' 60 லட்சம் ரூபாய் என, நான்கு தொழில்முனைவோருக்கு, 5.20 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஆணையை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார்.