ADDED : செப் 08, 2025 12:57 AM

'எ க்ஸ் ரோபோ' என்ற புதிய கண்காணிப்பு ரோபோவை, 'மைபாட் வெஞ்சர்ஸ் இந்தியா' எனும், சென்னையைச் சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நான்கு சக்கரங்களை கொண்ட இந்த ரோபோ, பாதுகாப்பு சம்பந்தமான பணிகளுக்கு ஏற்றது.
தொழிற்சாலைக்குள் ஹெல்மெட், கிளவுஸ் உள்ளிட்டவற்றை அணியாமல் தொழிலாளர்கள் பணியாற்றினால், இது சமிக்ஞை கொடுக்கும்; விபத்துகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும்.
இதேபோல், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். போலீசாரின் சந்தேக லிஸ்டில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களை இந்த ரோபோவில் பதிவு செய்து வைத்தால், கூட்டத்திற்குள் அவர்கள் இருந்தால் ஒலி எழுப்பி அடையாளம் காட்டி எச்சரிக்கும்.
இது தொடர்பாக, இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் விவேக் திலிப் அளித்த பேட்டி:
உற்பத்திக்கான மூலதன நிதியை எப்படி திரட்டினீர்கள்?
நம் தொழில் சமூகம், ஐ.டி., தொழிலைச் சார்ந்த சமூகமாக உள்ளது. இங்கு, ஐ.டி., நிறுவனங்களை ஆரம்பிப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கிறது.
ஆனால், ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால், எங்கள் தாய் நிறுவனமான அஸ்திராவில் இருந்து பெற்ற நிதியை வைத்தே, நாங்கள் இத்தொழிலை துவங்கினோம்.
ரோபோக்களின் விலை?
இண்டோர் பாட், அவுட்டோர் பாட் என்று இரண்டு வகை ரோபோக்களை தயாரித்துள்ளோம்; இண்டோர் பாட்களின் விலை 20 லட்சம் ரூபாய். இப்போது இவற்றை கத்தாரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு தயாரித்து வழங்குகிறோம். அவுட்டோர் பாட்களுக்கு விலை நிர்ணயிக்கவில்லை. அவற்றை வாடகைக்கு விடும் எண்ணம் உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில், புதுச்சேரி கடற்கரை பகுதியை கண்காணிக்க இரண்டு எம்.எக்ஸ்., ரோபோக்களை வாங்கவுள்ளனர். கேரளாவின் கொச்சி மாவட்டத்திலும் இந்த ரோபோவை பயன்படுத்துவது தொடர்பாக பேச்சு நடக்கிறது.
தமிழக அரசு இந்த ரோபோவை வாங்கவில்லையா?
எங்கள் அலுவலகம் சென்னையில் இருந்தாலும், இது தொடர்பாக தமிழக அரசை எங்களால் இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை.