கல்லுாரி வளாக வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு
கல்லுாரி வளாக வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு
ADDED : நவ 14, 2024 03:21 AM

சென்னை:'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், அரசு, தனியார் என, அனைத்து கல்லுாரிகளிலும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க பதிவு செய்யுமாறு தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக பல தொழில் நிறுவனங்கள் சென்னை, கோவையில் உள்ள சில தனியார் கல்லுாரிகளில் மட்டும், ஆண்டுதோறும் வளாக நேர்காணல் நடத்தி, வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளன.
ஆனால், மாநிலம் முழுதும் திறன்மிக்க மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
எனவே, அத்தகைய மாணவர்களுக்கு வேலை கிடைப்பதற்காக, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், வளாக நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
இது, அண்ணா பல்கலை உடன் இணைந்து நடத்தப்படும். வேலைவாய்ப்பு முகாமில், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்க, நான் முதல்வன் திட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அந்நிறுவனங்களிடம், தமிழகம் முழுதும் அரசு, தனியார் என, அனைத்து கல்லுாரிகளிலும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் விபரம், அவர்களின் மதிப்பெண், பயிற்சி உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.
கல்லுாரிகளின் பெயர் தெரிவிக்கப்படாது. நிறுவனங்கள், அந்த விபரங்களை பார்த்து, தங்களுக்கு ஏற்ற மாணவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நேர்காணல் நடத்தி, ஆட்களை தேர்வு செய்யலாம்.
இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் நிறுவனங்களை வரவழைத்து, அரசு கல்லுாரிகளில் வளாக நேர்காணலும் நடத்தப்படும். அதில், அருகில் உள்ள தனியார், அரசு கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.