டீசல் பஸ்களை சி.என்.ஜி.,க்கு மாற்ற தமிழக அரசு ரூ.66 கோடிக்கு ஆர்டர்
டீசல் பஸ்களை சி.என்.ஜி.,க்கு மாற்ற தமிழக அரசு ரூ.66 கோடிக்கு ஆர்டர்
ADDED : செப் 25, 2025 02:34 AM

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களின் 850 டீசல் பஸ்களை, 'சி.என்.ஜி.,' பஸ்களாக மாற்ற, தமிழக அரசிடம் இருந்து 66 கோடி ரூபாய்க்கு 'எகோ ப்யூயல் சிஸ்டம்ஸ்' நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது.
அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்தால், ஆண்டுக்கு 5.70 லட்சம் டன் அளவுக்கான கார்பன் டை ஆக்சைடு நச்சு வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும்.
டீசல் பஸ்களை முழு சி.என்.ஜி., பஸ்களாக மாற்ற, இன்ஜின் உபகரணங்கள், எரிவாயு மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படும். கார்களில் வருவது போன்ற சி.என்.ஜி., சிலிண்டர்கள் வழங்கப்படும்.
தமிழகத்தின் பசுமை போக்குவரத்து திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுகிறது. இது, 2030க்குள் பொது போக்குவரத்து பஸ்களை மாற்று எரிபொருளுக்கு மாற்றும் மத்திய அரசின் தேசிய பசுமை போக்குவரத்து திட்ட இலக்கை அடைய உதவும்.
எகோ ப்யூயல் சிஸ்டம்ஸ் நிறுவனம், மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இன்ஜின் வாகனங்களை, சி.என்.ஜி., எல்.என்.ஜி., எல்.பி.ஜி., எரிவாயு வாகனங்களாக மாற்றுவதில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை, 10 லட்சத்திற்கு அதிகமான இன்ஜின் வாகனங்களை பசுமை எரிவாயு வாகனமாக இந்நிறுவனம் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.