ஐ.டி., வேலைவாய்ப்பை அதிகரிக்க ஓசூரை சுற்றி அறிவுசார் வழித்தடம் ஆய்வு நடத்தும் தமிழக அரசு
ஐ.டி., வேலைவாய்ப்பை அதிகரிக்க ஓசூரை சுற்றி அறிவுசார் வழித்தடம் ஆய்வு நடத்தும் தமிழக அரசு
ADDED : ஜூலை 10, 2025 11:42 PM

சென்னை:தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை அதிகரிக்க, ஓசூர் நகரை சுற்றி, அறிவு சார் பெரு வழித்தட திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரில் தொழில் வளர்ச்சி காணப்படுகிறது. அம்மாவட்டத்தில் மற்ற நகரங்களும், தர்மபுரி மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. இம்மாவட்டங்களுக்கு அருகில் உள்ள கர்நாடகாவின் பெங்களூரு நகரம், தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
எனவே, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை அதிகரிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஓசூர் நகரத்தை ஒட்டி, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக, ஓசூருக்கு அருகில் உள்ள நகரங்கள், தர்மபுரி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், உலகளாவிய திறன் மையம் அமைக்க, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெங்களூரில் காணப்படும் இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை, நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளன.
எனவே, அங்கு செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், திறன் மையம் போன்றவற்றை, வேறு மாநிலங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளன.
இதனால், ஓசூர் அறிவுசார் வழித்தடம் பெயரில் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், முதலீட்டை ஈர்க்க முடியும்.
இதற்கான ஆய்வில், தொழில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆய்வு முடிவுக்கு ஏற்ப, ஓசூரை சுற்றி அறிவுசார் வழித்தடத்துக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.